×

கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை

மேட்டுப்பாளையம்: கோவை அருகே மாங்கரை வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய வனப்பகுதிகளில் கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் ஆனைகட்டி, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை கோவை வனத்துறையினர் மாங்கரை வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையில் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் திருமுருகன், வனகால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் இறந்து கிடந்த யானையை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இதுகுறித்து வனகால்நடை மருத்துவர் சுகுமார் கூறுகையில், ‘‘இறந்து கிடந்தது 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை. நுரையீரல் பாதிப்பால் யானை உயிரிழந்ததது. எனினும் யானையின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்கு பின்னரே யானை உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்’’ என்றார்.

The post கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில் இறந்து கிடந்த பெண் யானை: வனத்துறை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Goa ,Forest Department ,METUPPALAYAM ,MANGARAI FOREST ,KOWA ,Koh ,Dinakaran ,
× RELATED விவசாய நிலங்களையும், இந்து...